சவுதி அரேபியாவின் அடுத்த பிரம்மாண்டமான ஒரு கட்டுமான திட்டத்தை சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் புதிய முராபா என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய நகர்ப்பகுதியை உருவாக்குவதாகவும், நகரின் மையமாக, முகாப் என்றும் அழைக்கப்படும் பிரமாண்ட கட்டிடம் இடம்பெறுவதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பிரம்மாண்ட நகர திட்டம் தொடர்பான காணொளியை சவுதி அரசு வெளியிட்டுள்ளது.இது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. முகாப் திட்டமானது, 400 மீட்டர் உயரம், 400 மீட்டர் நீளம், 400 மீட்டர் அகலம் கொண்ட கனசதுர வடிவ கட்டுமானமாக அமைய உள்ளது.
இந்த திட்டத்தில் அருங்காட்சியகம், தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம், தியேட்டர் மற்றும் 80 க்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார மையங்கள் ஆகியவை இடம்பெறும் என காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய முராபா நகரம், 2.5 கோடி சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக இருக்கும். 104,000 குடியிருப்புகள், 9,000 விடுதி அறைகள், 14 லட்சம் சதுர மீட்டர் அலுவலக இடம், 6.2 லட்சம் சதுர மீட்டர் ஓய்வு மையங்களுக்கான பகுதி மற்றும் 18 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு சமுதாய வசதிகள் இருக்கும்.
இந்த பகுதிக்கான பிரத்யேக போக்குவரத்து அமைப்பு உருவாக்கப்படுகிறது. இதன்மூலம் விமான நிலையத்திலிருந்து 20 நிமிடத்தில் இந்த நகரை அடையலாம்.புதிய நகரின் கட்டுமான பணிகள் 2030ல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.