சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் முதல் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தும் முகமாக அரசாங்கத்தில் உள்ள சகல கட்சிகளுக்கும் விசேட கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள நிலையில் இதில் கலந்து கொள்ள போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் இராஜாங்க அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்படும் வரை இந்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
சகல கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற ரீதியில் முழுமையாக இணக்கம் தெரிவிப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
அதன்படி பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வ கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் ஊடாக தெரியப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் கலந்துரையாட நாளை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி, அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் கட்சித் தலைவர்களுக்கும் ஆளும் தரப்பின் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் குறித்த கலந்துரையாடலானது நாளைய தினம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.