விவசாய நடவடிக்கைக்காக சென்ற மூவரை யானைகள் தாக்கியதில் ஒருவர் பலியாகியதுடன் இருவர் சிகிச்சைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பெரிய கொக்கனாரை வட்டை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதன் போது யானை தாக்கியதில் ஒரு நபர் சம்பவ இடத்துலேயே உயிரிழந்ததோடு மேலும் இருவர் வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் 3 பிள்ளைகளின் தந்தையான 55 வயது மதிக்கத்தக்க மட்டக்களப்பு தரவை 1 கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த குடும்பஸ்தரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலும் இத்தாக்குதலில் காயமடைந்துள்ள 29 வயதையுடையவர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருவதுடன் 52 வயதையுடைய மலையடி கிராமம் 2 கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்தவர் சிகிச்சைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த காலங்களில் சம்மாந்துறை பிரதேசத்தில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது வயல் அறுவடை காலம் என்பதால் யானை நடமாட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.