கண்டகுடா பகுதியில் பீடி இலைகளை கடத்திச்சென்ற சிலர் தப்பியோடியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
பீடி இலைகளை கடத்துவதாக கற்பிட்டி விஜய கடற்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய கண்டகுடா பகுதியில் வைத்து இன்று அதிகாலை சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது பீடி இலைகள் மற்றும் ஏற்றுவதற்கு நிறுத்தி வைத்திருந்த டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டதாக விஜய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
35 உரைப்பைகளில் அடைக்கப்பட்ட நிலையில் சுமார் 1111 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பீடி இலைகள் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவித்துள்ளனர்.கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் 2 கோடி ரூபாவிற்கும் பெறுமதியானது என மதிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் டிப்பர் வாகனம் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி விஜய கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.