சிறைக்கைதிகள் செய்த குற்றத்தின் தீவிரம் எதுவாக இருந்தாலும் அவர்களைக் கவனித்துக்கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நீதியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், சிறைக் கைதிகளுக்கு அரசாங்கம் வழங்கும் வசதிகளைத் தவிர்த்து மேலதிக நலன்புரி வசதிகளை வழங்குவதற்கு ஆய்வுக் குழுக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும், 1934 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக நாட்டின் சிறைச்சாலை கட்டளைச்சட்டத்தை ‘மனிதாபிமான முறையில்’ திருத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்த அமைச்சர், தற்போதுள்ள சிறைச்சாலைகளில் மரண தண்டனை கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க 06 பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சிறு குற்றங்களைச் செய்தவர்களை வீட்டுக் காவலில் வைப்பதற்காக புதிய சட்டங்களை இயற்றுவதற்கு ஏற்கனவே குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் அடைக்கப்பட்டுள்ள 26,000 நபர்களில் கிட்டத்தட்ட 8,000 பேர் இதுவரை குற்றவாளிகள் என கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.