ரஷ்யாவுக்கு எதிரான போரில் கூடுதல் ஆயுதங்களுக்கு உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது. போர் விமானங்களும் நெடுந்தொலைவு ஏவுகணைகளும் தேவைப்படுவதாக உக்ரைன் கூறியது.
மேற்கத்திய நட்பு நாடுகள் குறைந்தது 150 கவச வாகனங்களைக் கொடுத்து உதவ உறுதியளித்துள்ளன. ஆனால் அவை போதாது என்றும், கூடுதல் ஆயுதங்கள் தேவை என்றும் உக்ரைன் கூறுகிறது. மேலும், மேற்கத்திய நாடுகள் உறுதியளித்துள்ள கவச வாகனங்கள் வந்துசேர்வதற்கு மாதங்கள் ஆகலாம் என்றும் அது குறிப்பிட்டது.
ஸ்கை செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி, கவச வாகனங்கள் தாமதமாக வந்துசேரக்கூடும் என்று அஞ்சுவதாகத் தெரிவித்தார்.
பிரிட்டன் மார்ச் மாத இறுதியில் சலஞ்சர் கவச வாகனங்களை அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளது. கனடாவும் உதவி செய்ய முன்வந்துள்ளது.
ஜெர்மானியத் தயாரிப்பான லெபார்ட் 2 ரகக் கவச வாகனங்களை வரும் வாரங்களில் அனுப்பி வைக்கவிருப்பதாக அது கூறியது.