தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் குழு இன்று (22) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாட்டை வந்தடைந்தது.
இலங்கைக்கு அனுப்புவதற்காக 51 இலங்கையர்கள் குவைத் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட போதிலும், அவர்களில் 3 பேரின் ஆவணங்களில் உள்ள குறைபாடுகள் காரணமாக இலங்கைக்கு வரமுடியவில்லை.
இன்று வந்த வீட்டுப் பணியாளர்களில் 38 பெண்களும் 10 ஆண்களும் அடங்குவர்.இந்த இலங்கையர்கள் 04 வருடங்களுக்கு மேலாக குவைத்தில் தங்கியிருப்பதாகவும், அவர்கள் முதலாளிகளை விட்டு வெளியேறி வேறு பணியிடங்களில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனினும், அவர்களால் இலங்கைக்கு திரும்ப முடியாமல், குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் இலங்கைக்கு வருவதற்கு பதிவு செய்து, தற்காலிக கடவுச்சீட்டு மூலம் தாயகம் திரும்பியுள்ளனர்.
குவைத்துக்கான இலங்கைத் தூதுவர் திரு. காண்டீபன் பாலசுப்ரமணியம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியோர் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து குழுவை இலங்கைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான பணிகளைச் செய்ய பெரும் முயற்சி எடுத்துள்ளனர்.