கண்டி வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றூழியர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகக் கூறப்படும் பச்சிளம் குழந்தைகளை பணத்திற்காக விற்பனை செய்யும் மோசடியை நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் நாவுல பொலிஸாருடன் இணைந்து நேற்று முன்தினம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது வைத்தியசாலையில் பணிபுரியும் ஒருவரின் வீட்டில் இரண்டு மாத கைக்குழந்தைகள் இரண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலி மற்றும் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இரண்டு குடும்பங்களுக்கு இந்த இரண்டு சிசுக்களும் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்டி நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் நீதிமன்ற உத்தரவைப் பெற்று இரண்டு சிசுக்களையும் சிறுவர் இல்லத்தில் ஒப்படைத்ததாகவும் இந்த குழந்தைகளின் தாய் ஒருவர் தெல்தெனிய பிரதேசத்திலும் மற்றையவர் நிகவெரட்டியிலும் வசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.