சென்னையில் குறைபாட்டுடன் பிறந்த குழந்தை ஒரே மாதத்தில் உயிரிழந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் உறவினர்களுடன் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி வனிதாவுக்கு 2வது குழந்தை கருவுற்றிருந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்தார்.
எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவ மனையில் வனிதாவுக்கு கடந்த மே மாதம் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தைக்கு ஆண், பெண் என இரு உறுப்புகள் இருந்ததாகவும் பிறந்த குழந்தை ஆணா, பெண்ணா கூட தெரியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் குழந்தைக்கு மூளைப்பாதிப்பு உள்ளிட்ட வளர்ச்சி குறைபாட்டால் பிறந்த ஒரே மாதத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
கர்ப்பிணி பெண்ணுக்கு எடுக்கும் ஸ்கேனில் தவறு காரணமாக இது போன்று நடந்துள்ளதாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்ததால் குழந்தையை இழந்த தாய் அதிர்ச்சியடைந்தார். அதனை தொடர்ந்து மடிப்பாக்கத்தில் உள்ள அந்த தனியார் மருத்துவமனையில் உறவினர்களுடன் சென்று வனிதா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போலீசார் மற்றும் வனிதா தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.