குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை பன்னோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், தனியாக பிரிந்து வந்தபோது, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனை, அனைத்து வசதிகளுடன் கூடிய பன்னோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் அறிவித்து, முதல்கட்டமாக ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில், முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை பன்னோக்கு மருத்துவமனையாக விரைவில் தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லாவரம் பகுதி செயலாளர் பிரபாகர் தலைமையில் மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அக்கட்சியை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.