கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் ஆரம்பிக்கவும் மற்றும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடனான கேட்போர் கூடம் அமைப்பதற்கும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உரமானியம், நெல் விலை நிர்ணயம் மற்றும் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி இங்கு உறுதியளித்துள்ளார்.
மட்டக்களப்பிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (10.03.2023) விஜயம் மேற்கொண்ட போது மட்டு. விமான நிலையத்தில் தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க.மோகன் அவரை நட்பு ரீதியாக சந்தித்துள்ளார்.
இதன்போது கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கனகசிங்கம், பதிவாளர் பகிரதன் ஆகியோருக்கு ஜனாதிபதி உடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியல் பீடம் ஆரம்பிப்பதற்கும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடனான கேட்போர் கூடம் அமைப்பதற்கும் வேண்டுகொள் விடுத்ததையடுத்து ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் அறுவடைக் காலத்தையும், விதைப்புக் காலத்தையும் கருத்திற் கொண்டு உரமானியம், நெல்விலை நிர்ணயம் மற்றும் நெல் கொள்வனவு போன்றன மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் மாவட்ட விவசாயிகளின் நன்மை கருதி என்னால் விடுக்கப்பட்டது.
இதற்கு என்னால் குறித்துரைக்கப்பட்ட விடயங்களுக்கு ஏற்றவாறே மேற்குறிப்பிட்ட விடயங்கள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி என்னிடம் உறுதியளித்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.