ஜப்பான் மற்றும் அவுஸ்ரேலியா நாடுகளின் நிதியுதவியுடன் டெல்வன (டாஸ்) நிறுவனத்தினால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணிவெடி அகற்றும் பணி மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் மக்களைக் குடியேற்ற முடியாத பகுதிகளை அடையாளம் காணப்பட்டு, வெடிபொருள் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளைப் பாதுகாப்பான பகுதிகளாக அடையாளப்படுத்தும் விதமாக இப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஏறத்தாழ, 433 பேர்களுடன் பணிகள் நடைபெற்று வருகின்றன, அப்பணிக்கு மேலதிகமாக வெடிபொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் சம்பந்தமான விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, அவர்களுக்குப் பாதுகாப்புடன் இருக்கவும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
2010ஆம் ஆண்டிலிருந்து கணணிவெடியகரும் பணியை டாஸ் நிறுவனமானது வடமாகாணத்தில் முன்னெடுத்து வருகின்றது.இதன் மூலம் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளான புணர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்திற்குப் பெரிதும் உதவி புரிந்து வருகிறது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தற்போது 15.5 சதுர கிலோமீற்றர் கண்ணிவெடி அகற்றப்பட்ட பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், குறித்த நிறுவனத்தினால் கையளிக்கப்பட்ட இடங்களாகக் கிளிநொச்சி பல்கலைக்கழக வளாகம், வயல் நிலங்கள், ஆற்றங்கரைகள், பள்ளிக்கூட வளாகம், கோயில், ஆனையிறவு உப்புவயல்கள், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மற்றும் கால்நடை மேய்ச்சல் நிலங்கள் போன்ற பகுதிகள் பாதுகாப்பாக அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, முகமாலை, மணலாறு, மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதியில் பணிகள் நடைபெற்று வருவதுடன், அவற்றில் 357 இடங்களில் முழுமையாகக் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு, மேலும் 13 இடங்களில் பணிகள் நடைபெற்று வருவதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது.
அத்தோடு, 26 இடங்களில் வெடிக்காத வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும், 110,058 தனிநபர் கண்ணிவெடிகள், 254 கனரகவாகன கண்ணிவெடிகள், 26,508 வெடிக்காத பொருட்கள், மற்றும் 168,141 சிறிய ஆயுதங்கள் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் கணக்கிட்டுள்ளது.
ஜப்பான் மற்றும் அவுஸ்ரேலியா நாடுகளின் உதவித் திட்டமானது 2010ஆம் ஆண்டுக்கான நிதியுதவி திட்டத்தின் கீழ் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.