குஜராத் வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு சென்று கைத்தறி ஓட்டி நெகிழ்ந்தார். 2 நாள் பயணமாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று இந்தியா வந்துள்ளார். குஜராத் விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், ஆளுநர் ஆசாரியா தேவ்ராட் மற்றும் அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திலிருந்து போரீஸ் ஜான்சன் தங்கவிருக்கும் விடுதிக்கு இடையே 4 கி.மீ. பயண தூரத்துக்கு போரீஸ் ஜான்சனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
உற்சாக வரவேற்பு விமான நிலையத்திலேயே பாரம்பரிய முறைபடி குஜராத்திய நடனமாடி அவரை கலைஞர்கள் வரவேற்றனர். அதேபோல் அவர் காரில் செல்லும் வழிநெடுகிலும் நடைபாதைகளில் கலைஞர்களை நிறுத்தி நடனங்கள், மலர் தூவல்கள் என பிரம்மாண்ட வரவேற்பை அம்மாநில அரசு அளித்தது. வழக்கமாக குஜராத் வரும் வெளிநாட்டு தலைவர்கள் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு செல்வது வழக்கம். சபர்மதி ஆசிரமத்தில் பிரிட்டன் பிரதமர் அந்த வகையில் போரீஸ் ஜான்சனும் சபர்மதி ஆசிரமம் சென்றார். அங்கு கைத்தறி இயந்திரத்தை இயக்க அவருக்கு ஆசிரம ஊழியர்கள் சொல்லிக்கொடுத்தனர். இதன் பின்னர் சிரித்துக்கொண்டே கைத்தறி இயந்திரத்தை அவர் ஓட்டினார். அப்போது அங்குள்ள பார்வையாளர் வருகை குறிப்பில், “இந்த அசாதாரணமான மனிதரின் ஆசிரமத்துக்கு வருவதும், உலகத்தை சிறப்பாக மாற்ற உண்மை மற்றும் அகிம்சை போன்ற எளிமையான கொள்கைகளை கொண்டு அவர் எவ்வாறு அணி திரட்டினார் என்பதை புரிந்துகொள்வதும் எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழிலதிபர்களுடன் சந்திப்பு தொடர்ந்து குஜராத் மாநில தொழிலதிபர்கள் உடனான சந்திப்பில் கலந்துகொள்ளும் போரீஸ் ஜான்சன், முதலீடுகள் தொடர்பாக பேச இருக்கிறார். அதன்பின்னர் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் உள்ள பிரிட்டனை சேர்ந்த கட்டுமான தொழில்நுட்ப நிறுவனமான ஜே.சி.பி உற்பத்தி தொழிற்சாலையை போரீஸ் ஜான்சன் பார்வையிடுகிறார். நாளை மோடியுடன் சந்திப்பு காந்திநகரில் உள்ள பிரிட்டனின் எடின்பெர்க் பல்கலைக்கழக ஒத்துழைப்போடு தொடங்க இருக்கும் பயோ டெக்னாலஜி பல்கலைக்கழக கட்டுமானப் பணியை அவர் ஆய்வு செய்கிறார். இறுதியாக காந்திநகரில் உள்ள சுவாமி நாராயணன் பகுதியில் அமைந்திருக்கும் அக்ஷரதம் கோயிலுக்கு சென்று போரீஸ் ஜான்சன் பார்வையிட இருக்கிறார். இதையடுத்து டெல்லி புறப்படும் அவர் நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருநாட்டு நல்லுறவுகள், பொருளாதார ஒப்பந்தங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.