சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பானது தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 36 நாட்களில் சுமார் 60,000 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் சீனாவின் வுஹான் நகரில் உள்ள ஆய்வு கூடத்திலிருந்துதான் பரவியதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டின. ஆனால் சீனா இதனை மறுத்தது. எது எப்படி இருந்தாலும் தொற்று மளமளவென பரவியதில் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. இன்று வரை சுமார் 66 கோடிக்கும் அதிகமான மக்கள் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல 67 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். சீனாவிலிருந்து இந்த தொற்று பரவியதாக சொல்லப்பட்டதாலும், அந்நாட்டில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதாலும் இவர்களை காக்க சீன அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் இதற்கு எதிர்மாறாக செயல்பட்டன. கட்டுப்பாடுகள் கொஞ்ச நாட்களுக்கு மட்டும் விதித்துவிட்டு, பின்னர் கொரோனாவுடன் வாழ பழகுவோம் என்று கூறிவிட்டன.
இதன் விளைவு உயிரிழப்பில் பிரதிபலித்தது. அமெரிக்காவில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். 11 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். கொரோனா தொற்றல் அதிக அளவில் உயிரிழப்புகள் பதிவானது இந்த நாட்டில்தான். அதேபோல இதற்கடுத்து பிரேசில் இந்தியா போன்ற நாடுகளில் அதிக அளவு உயிரிழப்பு பதிவானது. மறுபுறம் சீனாவில் மிகக் குறைந்த அளவில் மட்டுமே உயிரிழப்புகள் பதிவாகின. இதற்கு காரணம் அந்நாட்டில் கடைபிடிக்கப்பட்ட பூஜ்ஜிய கோவிட் கொள்கைதான். அதாவது ஒரு ஏரியாவில் யாரேனும் ஒருவருக்கு லேசான காய்ச்சல் இருந்தால் கூட அந்த நபரின் குடும்பத்தினர் மட்டுமல்லாது அந்த ஏரியா முழுவதும் கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இதில் யாருக்கேனும் தொற்று பாதிப்பு அறிகுறி கண்டுபிடிக்கப்படுதோ அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள். மட்டுமல்லாது அந்த ஏரியாவில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்படும். ஓட்டலை தவிர வேறு எதுவும் அந்த பகுதியில் திறந்திருக்காது. இவ்வளவு கடுமையான கட்டுப்பாடுகள்தான் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உதவியிருக்கிறது. ஆனால் இது சாமானிய மக்களின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்திருக்கிறது. ஏறத்தாழ மூன்றாண்டுகள் பொறுத்து பார்த்த மக்கள் கடைசியில் வெறுப்படைந்து போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் சீனா குறித்த தவறான பிம்பத்தை உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த போராட்டத்திற்கு மறைமுகமாக ஆதரவளித்தது. இதனையடுத்து சீன அரசு தனது கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொள்ளவதாக அறிவித்தது. கடந்த டிசம்பர் 8ம் தேதி இந்த கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டது. ஆனால் இந்த உத்தரவு வந்த காலகட்டம் BF 7 வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருந்த நேரமாகும். எனவே இது சீனாவிலும் தீவிரமடைய தொடங்கியது. சீனாவின் மிக முக்கிய நகரங்களில் உள்ள மருந்தகங்களில் மருந்து தட்டுப்பாடும் ஏற்பட்டுவிட்டது. மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிய தொடங்கியது. ஆனால் உயிரிழப்புகள் குறித்த அறிவிப்பை சீனா வெளியிடவில்லை.
இந்நிலையில் இன்று இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதியிலிருந்து நேற்று முன்திம் அதாவது ஜனவரி மாதம் 12ம் தேதி வரை 36 நாட்களில் சீனா முழுவதும் 59,938 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளன. இந்த தகவலை சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் மருத்துவ விவகாரங்கள் துறையின் இயக்குநர் ஜியோ யாஹுய் உறுதி செய்துள்ளார். இதில் கோரோனா தொற்றால் நேரடியாக 5,503 பேரும் இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் 54,435 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் 80 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.