காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே தனியார் ஏ.டி.எம் இயந்திரத்தை மர்ம நபர்கள் கடப்பாரையால் உடைத்து கொல்லையடிக்கும் முயற்சி ரோந்து பணியில் இருந்த போலீசார் வருகையால் முறியடிக்கப்பட்டது.
வாலாஜாபாத் காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் உள்ள திமிராஜம் பேட்டையில் தனியார் நிறுவனத்தின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அதிகாலை நுழைந்த மர்ம நபர்கள் கடப்பாரையால் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அந்த வழியாக சைரன் எழுப்பிய படி ரோந்து வாகனத்தில் போலீசார் வந்து கொண்டிருந்ததை கண்ட கொள்ளையர்கள் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்கும் முயற்சியை பாதியில் விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதை அடுத்து ஏ.டி.எம் மையத்தை பார்வையிட்ட போலீசார் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்ததையும், எந்திரத்தை உடைக்க பயன்படுத்திய கடப்பாரை இரும்பு கம்பிகளையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
ஏ.டி.எம் இயந்திரத்தை ஆய்வு செய்த போலீசார் பணம் கொள்ளை அடிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்தனர். இதை அடுத்து ஏ.டி.எம் இயந்திரத்தை கொள்ளையடிக்க முற்பட்டவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.