காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு உலக நாடுகள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் ஜோபிடன் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுவர்கள், நோயாளிகள் என 500 பேர் வரை கொல்லப்பட்ட சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இது குறித்து ஹமாஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மருத்துவமனை மீதான தாக்குதல் போர்குற்றம், இனப்படுகொலை, இனப்படுகொலையை சர்வதேச நாடுகள், அரபு நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என குற்றம்சாட்டியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பாலத்தீன அதிபர் முகமது அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்னொரு பேரழிவை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ள அவர். கட்டாயமாக பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் முயற்சியை தொடர்ந்து எதிர்ப்போம் என்றும் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை மீதான தாக்குதல் ஒரு இனப்படுகொலை என்று ஜோர்டான் அரசு சாடியுள்ளது. அமெரிக்க அதிபர் பிடன் உடனான சந்திப்பையும் அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.இதையடுத்து ஜோர்டான் பயணத்தை ஜோபிடனும் ரத்து செய்துள்ளார். அமெரிக்க அதிபர் பைடன் தனது எக்ஸ் தள பக்கத்தில், காசாவிலுள்ள அல் அஹ்லி அரபு மருத்துவமனையில் ஏற்பட்ட வெடிவிபத்து மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பயங்கரமான உயிர் சேதத்தால் நான் கோபமும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளேன், எனத் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை மீதான தாக்குதலை கண்டித்து இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று லெபனான் அறிவித்துள்ளது. தாக்குதல் மன்னிக்க முடியாத குற்றம் என்று சவூதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பும் ஈரான் அரசும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளது.