கொட்டாஞ்சேனை ஹெட்டியவத்த சந்தியில் உள்ள கழிவுநீர் குழியில் விழுந்து கொழும்பு மாநகர சபையின் சாதாரண ஊழியர்கள் இருவர் (27) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு 14, பெர்குசன் வீதியைச் சேர்ந்த எல்.பி.பிரபாஷ் (38) மற்றும் கொழும்பு 10, மருதானையைச் சேர்ந்த கே.டி.சம்பத் (28) ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவர் உட்பட பல தொழிலாளர்கள் ஹெட்டியவத்த சந்தியில் கழிவுநீர் கால்வாயில் குழாய் அமைப்பில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது அவர்களில் ஒருவர் சுயநினைவை இழந்து பள்ளத்தில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரை காப்பாற்ற முயன்ற போது, மற்றொருவரும் பள்ளத்தில் விழுந்தார்.
உடனடியாக தலையிட்ட ஏனைய தொழிலாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இருவரையும் மீட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.அங்கு சிறிது நேரத்தில் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.
குழியில் உள்ள நச்சு வாயுவை சுவாசித்ததால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.