நாப்தா பற்றாக்குறையால் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் மூடப்பட்ட சில நாட்களின் பின்னர், அதன் மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்று (23) காலை 08.00 மணிக்கு மீண்டும் ஆலையின் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
போதியளவு நாப்தா கையிருப்பு இல்லாததால் களனிதிஸ்ஸ மின் நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் தற்போதுள்ள நாப்தாவைக் கொண்டு மீண்டும் மின் உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அது இன்னும் ஒன்றரை நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் எனவும் பேச்சாளர் தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு மின்சார சபை பணம் செலுத்தாததன் காரணமாக நாப்தாவை வழங்க மறுத்தமையே இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.