கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இம்மாதம் 29 இல் ஆரம்பமாகிறது. இதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 3,568 பரீட்சை நிலையங்களில் இம்முறை கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை நடைபெறுகிறது. எதிர்வரும் மே 29 முதல் எதிர்வரும் ஜூன் 08 வரை பரீட்சைகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். பாடசாலை ரீதியான பரீட்சாத்திகளுக்கான அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணைகள் ஆகியன உரிய பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தனிப்பட்ட பட்டதாரிகளின் அனுமதியட்டைகள் அவர்களது சொந்த முகவரிக்கும் கடந்த (15) முதல் தபாலில் அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதே வேளை, அனுமதி அட்டைகள் கிடைக்காத பாடசாலை பரீட்சாத்திகள், அனுமதி அட்டைகளை பாடசாலை அதிபர்களிடமும் தனிப்பட்ட பரீட்சாத்திகள் தனிப்பட்ட முறையில் இன்று தொடக்கம் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப் பூர்வ இணையதளத்தில், (www.doenets.lk)அனுமதி அட்டையை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத் தளமான www.doenets.lkல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.