தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: 2022-23ம் ஆண்டு பருவத்தில் 10.25 சதவீதம் பிழிதிறன் கொண்ட கரும்பு டன் ஒன்றுக்கு 3,050 ரூபாய், 9.5 பிழிதிறன் கொண்ட கரும்புக்கு 2,821 ரூபாய் விலை ஒன்றிய அரசு அறிவித்தது. உற்பத்தி செலவு அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு கரும்பு டன்னுக்கு 5 ஆயிரம் ரூபாய் விலை அறிவிக்க வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஒன்றிய, மாநில அரசுகள் தொடர்ந்து மவுனமாக இருந்து வருகின்றன. அரசின் அலட்சிய போக்கை கண்டித்து சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
உரிமைக்காக போராடிய விவசாயிகளை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன். விவசாயிகளின் குறையை தீர்க்காமல் அவர்களை வஞ்சிப்பது எந்த வகையில் நியாயம். டீசல், உரம், ஆட் கூலிவால் உயர் கரும்பு உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இதனால் எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால் வாழ்வாதாரத்தை இழந்து கரும்பு விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே, கரும்பு விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ரூ.5 ஆயிரத்தை உடனடியாக வழங்க, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்.