கருங்கடல் வழியே உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் தானிய ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பின்னர், அந்நாட்டில் இருந்து தானிய ஏற்றுமதி முற்றிலுமாக தடுக்கப்பட்டது. இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் உணவு பஞ்சம் தலை தூக்கவே துருக்கி மற்றும் ஐ.நா. தலையிட்டு புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ரஷ்யா, உக்ரைன், துருக்கி மற்றும் ஐ.நா.இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் படி, கருங்கடல் வழியாக உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் தானியங்கள் மற்றும் உரங்களை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யப்பட்டது.
பின்னர் ஒவ்வொரு 120 நாட்களுக்கும் இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டு வந்தது. இதனிடையே தங்களின் 3.5 லட்சம் டன் உரங்கள் ஐரோப்பிய பிராந்தியத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக புகார் கூறிய ரஷ்யா, தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறவும் முடிவு செய்துள்ளது.
தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் இன்றுடன் காலாவதியாகும் நிலையில், அது மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக துருக்கி அதிபர் தய்யீப் எரடோகன் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் 120 நாட்கள் நீட்டிக்கப்பட்ட ஒப்பந்தம் தற்போது 60 நாட்களுக்கு மட்டுமே நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.