கனடாவில் சீக்கிய மாணவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கல்லூரியில் படித்து வரும் மாணவர் ககன்தீப் சிங் (வயது 21). கடந்த வெள்ளிக்கிழமை இரவு ககன்தீப் சிங் தனது வீட்டுக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பஸ்சில் இருந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ககன்தீப் சிங் மீது ‘விக்’ உள்ளிட்டவற்றை வீசி அவரை தொல்லை செய்தனர். பொலிசில் புகார் அளிப்பேன் என ககன்தீப் சிங் எச்சரித்த பிறகும் அந்த இளைஞர்கள் அவரை தொடர்ந்து துன்புறுத்தினர்.
இதில் வெறுப்படைந்த ககன்தீப் சிங் பஸ்சில் இருந்து இறங்கினார். அவரை தொடர்ந்து அந்த இளைஞர்களும் பஸ்சில் இருந்து இறங்கினர். பின்னர் அந்த இளைஞர்கள் ககன்தீப் சிங்கை சரமாரியாக தாக்க தொடங்கினர்.
ஒரு கட்டத்தில் ககன்தீப் சிங்கை தரையில் தள்ளி கால்களால் உதைத்த அந்த இளைஞர்கள் ககன்தீப் சிங்கின் தலைப்பாகையை பறித்தனர். பின்னர் அவரது தலை முடியை பிடித்து தரதரவென சாலையில் இழுத்து சென்றனர்.
இந்த கொடூர தாக்குதலில் ககன்தீப் சிங்குக்கு கண், கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.இது ஒரு இனவெறி தாக்குதல் என தெரிவித்துள்ள பொலிசார் தப்பியோடிய இளைஞர்களை வலைவீசி தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.