அகமதாபாத்: குஜராத்தில் வங்கி ஊழியரை, வாடிக்கையாளர் ஒருவர் கொடூரமாக தாக்கும் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி உள்ளது . கண்ணிமைக்கும் நேரத்தில் கண்மண் தெரியாமல் வங்கி ஊழியர் தாக்கப்படுவது தொடர்பான இந்த வீடியோதற்போது வெளியாகி உள்ளது
குஜராத் மாநிலம் நாடியாட் என்ற ஊரில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளையில் வாடிக்கையாளர் ஒருவர் வங்கி ஊழியரை தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. என்ன நடந்தது? எதற்காக இந்த கொலைவெறி தாக்குதல் என்பதை விரிவாக பார்ப்போம்.
வங்கிகளில் வாடிக்கையாளர் , வங்கி ஊழியர்கள் இடையே நல்லுறவு இணக்கமாக இருந்தாலும், சில நேரங்களில் மோதல் ஏற்படுகிறது. அதிக நேரம் காக்க வைப்பது, கடன் தொடர்பாக சரியான பதில் தெரிவிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு வாடிக்கையாளர்கள் தெரிவிப்பதுண்டு. அதே நேரம் சில வாடிக்கையாளர்கள் வங்கிகளில்,கூட்டம் அதிகமாக இருக்கும் போது பொறுமை இல்லாமல் ஆவேசமாக கத்தி பேசுவது, வங்கி ஊழியர்களை மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது உண்டு. இப்படியான சந்தர்ப்பங்களில் வங்கியில் சண்டையும் களேபரமும் அதிகமாகிவிடும்
அப்படித்தான் கடன் விவகாரத்தில் குஜராத் மாநிலம் நடியாட்டில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளையில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் படி, வங்கியில் ஊழியர்கள் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர். வெள்ளை சட்டை அணிந்து அமர்ந்திருந்த வங்கி ஊழியர் ஒருவரை நோக்கி இரண்டு பேர் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது ப்ளூ டீசர்ட் அணிந்திருந்த நடுத்தர வயதுடைய ஒருவர், நேராக வெள்ளை சட்டை அணிந்திருந்த வங்கி ஊழியரை சரமாரியாக கன்னத்தில் அறைந்தார்.
என்ன நடக்கிறது என்பதை ஒரு நிமிட தாமதத்திற்கு பிறகு உணர்ந்த வங்கி ஊழியர்கள் உடனடியாக ஓடி சென்று அவரை விலக்கி விடுகின்றனர். ஆனாலும் ஆத்திரம் தீராத அந்த நபர் வங்கி ஊழியரை மறுபடியும் கன்னத்தில் அறைகிறார். வங்கி பாதுகாவலர் ஓடி வந்து அவரை இழுத்துக் கொண்டு சென்று சமாதானப்படுத்தினார். மொத்தம் 42 நொடிகள் ஓடக்கூடிய இந்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பிரபல செய்தி நிறுவனமான ஏ என் ஐ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , குஜராத் மாநிலம் நடியாட் வங்கி கிளையில், கடன் விவகாரம் காரணமாக ஊழியரை கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி வாடிக்கையாளர் தாக்கியுள்ளார். இது தொடர்பாக சிசிடிவி வீடியோ வெளியாகி இருக்கிறது. வங்கி ஊழியரை தாக்கிய வாடிக்கையாளர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்(scst act) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. இந்த வழக்கில் வங்கி ஊழியரை தாக்கிய நபர் மற்றும் அவருடன் வந்த நபர் உள்பட இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கி ஊழியர் வாடிக்கையாளர் ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை அரும்பாக்கத்தில் 32 கிலோ தங்கத்தை 3 பேர் முககவசம் அணிந்து வந்து, டாய்லெட்டில் ஊழியர்களை தள்ளிவிட்டு கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.