கண்டி ரயில் நிலையமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது
பல ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் மலையக புகையிரதத்தின் பல நிலையங்களில் மண் மேடு சரிந்து நீர் தேங்கியுள்ளமையினால் பல ரயில் பயணங்களை இரத்து செய்ய புகையிரத திணைக்களம் நேற்று (25) நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, நேற்று (25) இயக்கப்படவிருந்த கொழும்பு-பதுளை மற்றும் பதுளை-கொழும்பு ஆகிய இரண்டு இரவு நேர அஞ்சல் ரயில்களும், காலை 9:45 மணிக்கு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.
மேலும், முற்பகல் 10:40க்கு கோட்டையிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் புகையிரதமும், நள்ளிரவு 12:40க்கு ஹட்டனுக்குச் செல்லும் புகையிரதமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, கடும் மழை காரணமாக கண்டி புகையிரத நிலையம் நேற்று (25) முற்றாக வெள்ளத்தில் மூழ்கியிருந்த நிலையில், நண்பகலுக்குள் நிலைமை சீரடைந்ததாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
மழைநீர் தேங்கியதால், ரயில் நிலையத்தின் அனைத்துப் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பிற்பகல் வரை நிலைமையை சீர்செய்ய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மழையுடன் உலப்பனைக்கு அருகாமையில் புகையிரத பாதையில் பாறைகள் மற்றும் மேடுகள் சரிந்து விழுந்ததன் காரணமாக புகையிரத பாதை தடைப்பட்டுள்ளதாகவும் பிரிமத்தலாவ, கெலிஓயா, கம்பளை, பலான, பேராதனை மஹையாவ மற்றும் புகையிரத ஊழியர்கள் தண்டவாளங்களை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அநுராதபுரத்திலிருந்து மாத்தறை நோக்கிச் செல்லும் ரஜரட்ட ரஜின புகையிரதம் கணேவத்த மற்றும் நாகொல்லாகம புகையிரதப் பாதையில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததாலும், மின்சார கேபிள் மூடியதாலும் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் தாமதமாக சென்றதாக ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, உலப்பனை தரங்கமகல பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்ததாலும், கெலி ஓயா புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள வீதி வெள்ளத்தில் மூழ்கியதாலும் கண்டி நாவலப்பிட்டி மற்றும் கம்பளை புகையிரத பாதைகளின் ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.