கண்டி, போகம்பர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருள் வைத்திருந்த நான்கு பெண்கள் உட்பட 10 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்டி பொலிஸார் மற்றும் பொலிஸ் K9 பிரிவினர் இணைந்து குறித்த பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.சந்தேகநபர்களுடன் 39 கிராம் 265 மில்லிகிராம் ஹெரோயினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 06 ஆண்களும் 04 பெண்களும் உள்ளடங்குகின்றனர். சந்தேகநபர்கள் 26 மற்றும் 52 வயதுடையவர்கள் எனவும், பெண்கள் 24 முதல் 49 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் ஹீரெஸ்ஸகல, சுதுஹும்பொல, மஹய்யாவ, கண்டி மற்றும் திகன ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று (மார்ச் 05) கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.சந்தேகநபர்கள் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.