கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தில் புத்தர் சிலைகள் அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் யாழ்ப்பாண மாவட்ட செயலரை வலியுறுத்தியுள்ளார்.
யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் இந்த கோரிக்கையை யாழ்ப்பாண மாவட்ட செயலருக்கு கடிதம் மூலம் விடுத்துள்ளார்.
அக்கடிதத்தில், புனித அந்தோனியார் திருத்தலம் அமைந்துள்ள கச்சதீவில் புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரச மரங்கள் நாட்டப்பட்டுள்ளதாகவும் நம்பகரமான செய்திகள் எமக்குக் கிடைத்துள்ளன. இதுபற்றி ஊடகங்களில் செய்திகளும் விமர்சனங்களும் வந்துகொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.
எனவே இதனைத் தங்கள் கவனத்துக்கு கொண்டுவரும் நாம் இதுபற்றி ஆராய்ந்து முறையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இந்திய பக்தர்களும் இலங்கை பக்தர்களும் சமத்துவமாக ஒன்றுகூடி வழிபட்டுச் செல்கின்ற கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் தனித்துவத்துக்கு அங்கு அமைக்கப்ட்டுள்ள புத்தர் பெருமானின் சிலைகள், மற்றும் நாட்டப்பட்டுள்ள அரச மரங்கள் என்பன பாதிப்பை ஏற்படுத்துவதோடு இரு நாட்டு நட்புக்கும் பங்கம் ஏற்படவும் இவை வழிவகுக்கும் என்பதையிட்டு நாம் கவலையடைகிறோம்.
அத்துடன் கச்சதீவில் புனித அந்தோனியார் திருத்தலத்தைத் தவிர வேறெந்த அடையாளங்களோ, கட்டமைப்புக்களோ அமையக்கூடாது என்ற பாரம்பரியமும் மீறப்பட இப்படியான மத செயற்பாடுகள் வழிவகுத்து எதிர்காலத்தில் பல சிக்கல்கள் உருவாக ஏதுவாகும் என்பதையும் குறிப்பட விரும்புகிறோம்.
எனவே, இவ்விடயத்தில் தாங்கள் மிகுந்த கவனமெடுத்து கச்சதீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் – என்றுள்ளது.