திருவண்ணாமலையில் ஒரே இரவில் 4 இடங்களில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களை வெல்டிங் மெஷின் மூலம் உடைத்து லட்சக்கணக்கான பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் 10வது தெருவில் இயங்கி வரும் ஸ்டேட் பேங் ஏடிஎம் மையத்திற்குள் நள்ளிரவு புகுந்த கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங் மெஷின் மூலம், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதேபோல் தண்டராம்பட்டு சாலையில் உள்ள ஏடிஎம் ஒன்றில் மர்மநபர்கள் புகுந்து கேஸ் வெல்டிங் மெஷின் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதில் இருந்த ரூ.33 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மேலும், கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே இருந்த ஏடிஎம் மையத்தில் புகுந்த மர்ம நபர்கள் கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம்ஐ உடைத்து அதில் லட்சக்கணக்கான ரூபாயை திருடிச் சென்றுள்ளனர். இதேபோல் தொடர்ந்து போளூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஏடிஎம் மையத்திலும் மர்ம நபர்கள் புகுந்து கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம்ஐ உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஒரே நேரத்தில் நான்கு ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஏடிஎம் மையத்தில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை எரிந்து நாசமானதால் திருடர்களை கண்டுபிடிப்பதில் காவல்துறைக்கு சவாலாக உள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நேரடியாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொள்ளைபோன நான்கு ஏடிஎம் இயந்திரங்களில் மூன்று எஸ்பிஐ வங்கி ஏடிஎம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் சுமார் 75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.