ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முக தேர்வு மார்ச் 8ம் திகதி தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு.
ஒருங்கிணைந்த பொறியியல் பணியில் அடங்கிய பதவியில், காலியாக உள்ள 831 பணியிடங்களுக்கு 2.7.2022 அன்று எழுத்து தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் 39,538 பேர் கலந்து கொண்டனர். இத்தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முக தேர்வுக்கு 1,676 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கான சான்று சரிபார்ப்பு மற்றும் நேர்முக தேர்வு மார்ச் 8ம் திகதி முதல் 23ம் திகதி வரை நடைபெறும். இதே போல தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமை செயலக பணிகளில் அடங்கிய ஆங்கில நிருபர் மற்றும் தமிழ் நிருபர் பதவியில் காலியாக உள்ள 12 பணியிடங்களுக்கு, கடந்த டிசம்பர் 21ம் திகதி எழுத்து தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் 98 பேர் கலந்து கொண்டனர். இதில் கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு 30 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.