இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் காதலியை இளைஞர் ஒருவர் கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் டோம்லூரில் வேலை பார்த்து வந்தவர் தினகரன் (28). இவரும், ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்த இளம்பெண் லீலாவும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலம் முருகேஷ்பாளையத்தில் லீலா வேலை பார்த்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்ததையடுத்து, சாதியை காரணம் காட்டி திருமணத்தை மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தினகரன், காதலியை கொல்ல முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வேலை முடிந்து வெளியே வந்த லீலாவை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தினகரன் குத்தினார். கழுத்து, மார்பு மற்றும் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் லீலா சரிந்தார்.
இதையடுத்து தினகரன் அங்கிருந்து தப்பியோடினார். அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து லீலாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் லீலாவின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பொது இடத்தில் தனது காதலியை இளைஞர் ஒருவர் கொடூரமாக கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.