ஏமன் நாட்டில் ஏழை மக்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 85 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரும் காயம் அடைந்துள்ளனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் உள்ள பள்ளி ஒன்றில் அறக்கட்டளை ஒன்று ஏழைகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பொதுமக்கள் முண்டியடித்து கொண்டதில் பயங்கர நெரிசல் ஏற்பட்டது.
மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்த ஹவுதி கிளர்ச்சி கும்பல், வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டது. இதனால் அஞ்சிய பொதுமக்கள் சிதறி ஓடினர்.இக்கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலியாகி உள்ளனர். 322 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் பலர் பெண்கள், குழந்தைகள் என கூறப்படுகிறது.இந்நிகழ்வு சரியாக திட்டமிடப்படாததால் அசம்பாவிதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.