ஏப்ரல் மாதத்தில் எரிபொருளுக்கான குறிப்பிடத்தக்களவு நிவாரணத்தை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியும் என எரிசக்தி, மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதே வேளை மின்சாரக் கட்டணம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதுடன் எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் கட்டணக்குறைப்பை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.
ஏப்ரல் மாதம் இடம் பெறவுள்ள எரிபொருள் விலைச்சூத்திர மறுசீரமைப்பின் போது மக்கள் எதிர்பார்க்கும் குறிப்பிடத்தக்க நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்ட அமைச்சர்,மின்சார கட்டணம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதால், டிசம்பர் மாதமளவில் அதற்கான நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்: நாட்டில் நீண்ட காலமாக கனிய வளங்கள் தொடர்பான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அது தொடர்பில் நாம் ஒழுங்குவிதிகளைத் தயாரித்து முன்வைத்துள்ளோம். அதன்மூலம் போதியளவு முதலீட்டாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.
நமக்குள்ள சிறந்த வளங்களை பயன்படுத்தாது வெறுமனே வைத்திருக்க முடியாது. அதன்மூலமான நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கிணங்க உரிய ஒழுங்குவிதிகளை நிறைவேற்றிய பின்னர், சர்வதேச ரீதியான முதலீட்டாளர்கள் குறித்த இடங்களின் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். நாம் எதிர்பார்த்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து நாணயக் கடிதங்களை இனி திறக்க முடியும். அதன்படி குறைந்த விலையில் விநியோகங்களை மேற்கொள்ளவும் முடியும்.