மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கவரி வாரியத் (சிபிஐசி) தலைவர் சஞ்சய் குமார் அகர்வால் நேற்று கூறியதாவது:கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் கடத்தல் தங்கம் சுமார் 1,400 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் தங்கம் பறிமுதல் கிட்டத்தட்ட 43 சதவீதம் அதிகரித்து 2,000 கிலோவாக உள்ளது.
தங்கத்தின் மீதான வரியில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு எந்த மாற்றமும் இல்லை. என்றாலும் சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் தங்கத்தின் விலையைப் பொறுத்து கடத்தல் அளவு மாறுபடுவதாக கருதுகிறோம்.மியான்மர், நேபாளம் மற்றும் வங்கதேச நில எல்லைகள் வழியாகவே பெருமளவு தங்கம் இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டுள்ளது.
நில எல்லைகள் வழியாகவோ அல்லது விமான நிலையங்கள் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வழிகள் மூலமாகவோ தங்கம் கடத்தி வரப்படுவதை தடுக்க சிபிஐசி ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு சஞ்சய் குமார் அகர்வால் கூறினார்.
இந்தியாவில் இறக்குமதி தங்கத்தின் மீதான வரி 18.45 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் மிகக் குறைந்த அளவே தங்கம் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே நாட்டில் தங்கத்துக்கான மிகப்பெரிய தேவை, இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.