எம்பிலிப்பிட்டிய ஆயுர்வேத வீதியில் பெண் ஒருவரின் சடலம் நேற்று (4) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி காரில் வந்த மூவர் கடத்திச் சென்றதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள் சூரியவெவ பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், அவர் சூரியவெவ, வீரகம பிரதேசத்தில் வசிக்கும் 58 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவரின் மகன் எம்பிலிப்பிட்டியவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்ததாகவும், ஹோட்டல் உரிமையாளரின் மனைவியுடன் காதல் தொடர்பு கொண்டிருந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இருவரும் அப்பகுதியை விட்டு ஓடிவிட்டதாகவும், இதனால் ஹோட்டல் உரிமையாளர் பாதிக்கப்பட்டவரை கடத்திச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய மற்றும் சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.