ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் தற்போது கிடைக்கும் 9% நலன் அதன் உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்குச் சொந்தமான பணத்திற்கு வரி விதிக்கப்படுவதில்லை என்றும், நிதியத்திற்குச் சொந்தமான பணத்தை முதலீடு செய்த பின்னர் கிடைக்கும் இலாபத்திற்கு நூற்றுக்கு 14 சதவீதமாக மாத்திரமே வரி விதிக்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மனுஷ நாணாயக்கார,
“சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் படியும், மற்றும் கடன் வழங்குனர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலும்,தற்போது வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புப் பணிகள் தயார்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புடன், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.நாம் வெளிநாட்டுக் கடன்களாகப் பெற்றிருப்பது, அந்தந்த நாடுகளின்மக்களின் வரிப்பணம் என்பதான், நாம் அது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
அதனால், வெளிநாட்டுக் கடனை செலுத்த முடியாத நிலையில் உள்ள நாடு என்ற வகையில், உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்காமல், வெளிநாட்டுக் கடன்களை மாத்திரம் மறுசீரமைக்க இடமளிக்குமாறு கோரிக்கை விடுக்க எமக்கு வாய்ப்பில்லை. எனவே, உள்நாட்டுக் கடனை மறுசீமைப்பதும் கட்டாயம் ஆகும்.