சீனாவில் அதிகரித்து வரும் கொவிட் பரவல் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் சமகால தரவுகளை பகிர வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுள்ளது.
சீனாவில் கண்டிப்பான கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் அங்கு கொவிட் பரவல் தீவிரம் கண்டிருப்பதோடு சீனாவில் இருந்து வரும் பயணிகள் மீது நோய் சோதனை நடத்த பல நாடுகளும் நடவடிக்கை எடுத்துள்ளன.
இந்நிலையில் மருத்துவமனையில் இருப்போர், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்புகள் பற்றிய தரவுகள் தேவை என்று உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தடுப்பூசி வழங்கப்பட்டவர்களின் விபரமும் அவசியம் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொவிட் சோதனை நடத்தும் நடவடிக்கையை அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், தென் கொரியா, இந்தியா, இத்தாலி, ஜப்பான் மற்றும் தாய்வான் நாடுகள் அமுல்படுத்தியுள்ளன. இந்த வைரஸ் புதிதாகப் பரவும் அச்சம் உலகெங்கும் அதிகரித்துள்ளது.
சீனாவில் இருந்து இங்கிலாந்து வரும் பயணிகள் அவர்கள் விமானம் ஏறும் முன்னர் கொவிட் இல்லை என்ற சோதனை முடிவை தர வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
சீன அதிகாரிகளை சந்தித்த பின்னர் ஐ.நா சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘பெருந்தொற்று நிலை தொடர்பில் குறிப்பிட்ட சமகால சுகாதாரதரவுகளை தொடர்ச்சியாக பகிர்வதற்கு உலக சுகாதார அமைப்பு மீண்டும் கேட்டுக்கொண்டது. வழங்கப்பட்ட தடுப்பூசிகள் மற்றும் தடுப்பூசி நிலை, குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட பாதிக்கக் கூடிய மக்களின் தரவுகள் தேவையாக உள்ளன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உதவ விரும்புவதாகவும் தடுப்பூசியில் ஏற்பட்டிருக்கும் தயக்க நிலைக்கு தீர்வு வழங்க உதவுவதாகவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கொவிட்–19 மதிப்பாய்வு தொடர்பிலான உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கடந்த செவ்வாய் அன்று சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. அதில் வைரஸ் நிலை பற்றிய விபரம் அடங்கிய தரவுகளை தரும்படி சீன விஞ்ஞானிகளை அந்தக் குழு கேட்டுக்கொண்டது.
சீனாவில் கொவிட் தொற்றினால் கடந்த டிசம்பர் முழுவதும் 13 பேர் மாத்திரமே இறந்ததாக உத்தியோகபூர்வ தரவு குறிப்பிடுகின்றபோதும், பிரிட்டனைத் தளமாகக் கொண்ட ஆர்பினிட்டி சுகாதார தரவு நிறுவனத்தின் கணிப்பின்படி அந்நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 9000 பேர் நோய்த் தொற்றினால் உயிரிழப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.