மண்ணில் புதையும் நகரமாக உத்தரகாண்டின் ஜோஷிமத் நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ளது ஜோஷிமத் நகரம். இங்கு நிறைய கோயில்கள் இருப்பதால் ஆன்மீக நகரம் என அழைக்கப்படுகிறது. இது ரிஷிகேஷ்- பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது.
இந்த நகரத்தில் கடந்த சில நாட்களாக வீடுகளும் சாலைகளும் நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றன. சுமார் 15 ஆயிரம் பேர் வசித்து வந்த இந்த இடத்தில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது மிகவும் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.
இந்த ஜோஷிமத் நகரம் வாழ தகுதியில்லாத நகரம் என்றும் இதன் புவியியல் அமைப்பு மிகவும் மோசமாக இருப்பதாகவும் ஏற்கெனவே 50 ஆண்டுகளுக்கு முன்பே நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் கவனக்குறைவு காரணமாக மக்கள் அங்கு வசித்து வந்தனர். மக்களின் எடையை தாங்கும் அளவுக்கு இந்த நகரம் இல்லை என அறிவுறுத்தப்பட்ட போதிலும் கட்டுமான பணிகள், சாலை விரிவாக்கப் பணிகள் நடந்தன.நிபுணர்களின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதன் விளைவு தற்போது அந்த நகரமே மண்ணில் புதையும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு சுமார் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துவிட்டன. வீடுகள் மண்ணில் புதைந்துள்ள நிலையில் தொடர்ந்து சேதமடைந்து வருகின்றன. உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்றைய தினம் ஹெலிகாப்டர் மூலம் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அந்த பகுதியில் நடைபெற்று வந்த அரசின் கட்டுமான பணிகளை நிறுத்த உத்தரவிட்டார். இந்த நிலையில் ஜோஷிமத் நிலச்சரிவு தொடர்பாக நேற்றைய தினம் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஜோஷிமத்தின் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் பேசப்பட்டது. இந்த கூட்டத்தில் 10 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அவற்றில் மிக முக்கியமாக ஜோஷிமத் நகரம் மண்ணில் புதையும் நகரமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து 60 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஜோதிமத்தில் 4500 கட்டடங்களில் 610 கட்டடங்கள் அதிக அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளன. இவை வாழ தகுதியில்லாத கட்டடங்களாக மாறிவிட்டன.