திடீரென்று அதிகரித்த கடும் வெப்பம் காரணமாக ஈரான் நாட்டில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முதியவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. ஈரான் நாட்டில் கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட அதீத வெப்பம் பதிவாகி வருகிறது.
தெற்கு ஈரானில் பல நகரங்களில் தீயை உமிழ்வது போல வெயில் வாட்டி வதைக்கிறது. தெற்கு ஈரானில் உள்ள ஆவஸ் நகரில் அதிகபட்சமாக 51 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எதிர்பாராத வகையில் திடீரென்று அதீத அளவில் வெயில் கொளுத்துவதால் அசம்பாவிதங்களை தவிர்க்க ஈரான் அரசு 2 நாட்கள் பொது விடுமுறை அறிவித்தது.
இந்நிலையில் முதியவர்கள், நோய் பாதிப்புள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று ஈரான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அத்யாவசிய தேவை இருந்தால் மட்டும் வெளியே வருமாறு அறிவுறுத்தியுள்ளது.
உலகளவில் பல்வேறு நாடுகளில் அதீத வெப்ப அலையும், அதே வேளையில் பல நாடுகளில் வழக்கத்திற்கு மாறாக கடும் மழையும் கொட்டி வருகிறது. காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு மனித செயற்பாடுகளே காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.