இ.போ.ச ஊழியர்களுக்கான சம்பளத்தை தாமதமின்றி வழங்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
இதன்போது, இலங்கை போக்குவரத்து சபையின் பணியாளர்களுக்கான 2023 பெப்ரவரி மாத சம்பளத்தை இதற்கு முன்னரான மாதங்களில் வழங்கிய நடைமுறைக்கு அமைய தாமதம் இன்றி வழங்குவதற்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழு இணக்கப்பாட்டை வழங்கியது.
இலங்கை போக்குவரத்து சபை கடந்த காலத்தில் அரசியல் மயப்படுத்தப்பட்டமையால் பணியாளர்களை உள்ளீர்ப்பதில் சரியான நடைமுறைகள் பின்பற்றப்படாமையால் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
குறிப்பாக இவர்களுக்குக் காணப்படும் சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தேசிய சம்பளங்கள் மற்றும் பதவியணிகள் ஆணைக்குழுவுடன் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.