சிறார்கள் மத்தியில் போதைப்பொருள் பரவுவதை தடுப்பது சம்பந்தமாகவும், பெருந்தோட்ட சிறார்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிக கவனம் செலுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி. திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்று (03) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டபோதே, அவர் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
சிறார்களை இலக்கு வைத்து சந்தையில் ஒரு வகையான பாக்கு இருப்பதாகவும், அது போதைப்பொருளாக குறிப்பிடப்படாவிட்டாலும், சிறார்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க கூடியது என பொலிஸ் அதிகாரி ஒருவர் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை இதுவரை 43 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இ.தொ.காவின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட உட்பட அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.