நாட்டின் வான்வெளியைப் பயன்படுத்தும் வெளிநாட்டு விமானங்கள் மூலம் வருடாந்த வருமானதை அதிகரிக்கும் வகையில் விமானப் போக்குவரத்து சேவைக் கட்டணத்தை அதிகரிக்க துறைமுகங்கள், கடற்படை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்த விமானக் கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கட்டணங்கள் விமானத்தின் எடை மற்றும் பறக்கும் தூரத்தை அடிப்படையாகக் கொண்டவை.இந்தக் கட்டணங்கள் முப்பது நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களால் செலுத்தப்பட வேண்டும் மற்றும் தாமதமாகச் செலுத்தினால் இரண்டு சதவீத வட்டி விதிக்கப்படும்.
இயந்திரக் கோளாறுகள், வானிலை அல்லது விமானத்தின் பாதுகாப்பைப் பாதிக்கும் பிற காரணங்களால் எதிர்பாராதவிதமாக விமானப் பகுதிக்குள் நுழையும் விமானங்கள், மனிதாபிமான உதவிக்காக இயக்கப்படும் விமானங்கள், இராஜதந்திர விமானமாக நியமிக்கப்பட்ட விமானங்கள் மற்றும் இயக்குநர் ஜெனரலால் விலக்கப்பட்ட உள்வரும் விமானங்களுக்கு இந்தக் கட்டணங்களிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.