இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறையில் (UPI) QR குறியீட்டை பயன்படுத்தி ஒன்லைனில் பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
NPCI International Payments Limited மற்றும் இலங்கையில் LankaPay Pvt Ltd நிறுவனங்கள் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.
இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்தருணத்தில் 10,000 வணிக நிறுவனங்கள் தம்மை இந்த முறையில் பதிவு செய்துள்ளன.
மேலும், இந்திய சுற்றுலாப் பயணிகளின் தடையற்ற கொடுப்பனவு வசதிகளுக்காக 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கையை 65,000 வரை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
UPI பணப்பரிமாற்ற முறையை ஒன்லைன் மூலம் அறிமுகம் செய்யும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கையில்,
இது எங்களிற்கு மிகவும் முக்கியமான தருணம். இந்திய பிரதமர் மோடி அவர்களே இது உங்களிற்கு இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்த தருணம். இராமர் கோயிலை திறந்துவைத்தமைக்காக நான் உங்களை பாராட்டவேண்டும்.ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறை உலகின் தென்பகுதி நாடுகள் மத்தியிலான ஒத்துழைப்பை வெளிப்படுத்துகின்றது. எங்கள் உறவுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. கடந்த பத்து வருடங்களில் சவாலான தருணங்களில் இந்தியா தனது அயல்நாடுகளில் எவ்வளவு தூரம் ஆதரவாக உள்ளது என்பதை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம் என்றார்.