பல வருடங்களாக தொடரும் இலை உதிர்வு நோய் காரணமாக இறப்பர் விளைச்சல் வேகமாக குறைந்து வருவதாக கொழும்பு இறப்பர் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இறப்பர் விளைச்சல் குறையும் பட்சத்தில் நாட்டின் தேவைக்காக பாலை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என அதன் தலைவர் மனோஜ் உடுகம்பலா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் புதிதாக நடப்பட்ட இறப்பர் மரத்தினால் 03 வருடங்களுக்குள் பாலை உற்பத்தி செய்ய முடியும். எனினும் இலை உதிர்வு நோய் காரணமாக அறுவடை செய்வதற்கு ஏழு வருடங்கள் ஆகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நோயை குணப்படுத்தும் வேலைத்திட்டத்தை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளதாக கொழும்பு இறப்பர் வர்த்தகர்கள் சங்கம் அறிவித்திருந்தது.
தற்போது உள்ளூர் கைத்தொழில்களுக்காக வருடாந்தம் 70,000 மெற்றிக் தொன் இறப்பர் உற்பத்தி செய்யப்படுவதுடன் நாட்டில் 150,000 மெற்றிக் தொன் இறப்பர் தேவைப்படுகின்றமை குறிப்பி்டத்தக்கது.