புத்தளம் – முந்தல் சிறுகடலில் கடந்த இரண்டு நாட்களாக மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதனால் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிகின்றனர்.
அந்த வகையில் முந்தல்,கொத்தாந்தீவு, கட்டைகாகாடு, வட்டவான்,பூனைப்பிட்டி, ஆண்டிமுனை உள்ளிட்ட சிறுகடலை உள்ளடக்கிய பல பகுதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மீன்கள் இறந்து கரை ஒதுங்கி வருகின்றது.
இதன் காரணமாக இந்த சிறுகடலை நம்பி ஜீவனோபாயத் தொழிலான கடற்றொழிலை நம்பி வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் தமது மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மீனவர்கள் விசனம் குறிப்பிடுகினாறனர்.
கிளாத்தி, செத்தல், மன்னா, திலாப்பியா மற்றும் விரால் உள்ளிட்ட பல வகையான மீன்களே இவ்வாறு இறந்த நிலையில் கரையொதுங்குவதாக மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறு, மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்குவது தொடர்பில் புத்தளம் மாவட்ட நீரியல் வளத்துறை அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் ஆர்.எம்.பி.கே.ரணதுங்கவிடம் கேட்ட போது, கடந்த காலங்களில் முந்தல் சிறுகடலில் நீரில் உப்பின் தன்மை குறைவடைந்துள்ளதனாலேயே மீன்கள் இறப்பதற்கான காரணம் எனத் தெரிவித்தார்.
மேலும், குறித்த சிறுகடலில் இறந்துள்ள மீன்கள் சிலவற்றை பரிசோதனைக்காக நாரா நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.