அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் டொலரில் இரும்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
250 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 750 மில்லியன் டொலர்களில் இந்தியாவில் இருந்து இரும்பு மற்றும் உருக்கை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சந்தையில் அத்தியவசிய உணவுப் பொருட்கள், சமையல் எரிவாயு, எரிபொருள் உள்ளிட்டவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது,
இந்நிலையில் இரும்பு மற்றும் உருக்கு இறக்குமதி செய்யப்படுகின்றமை தொடர்பாக பொருளாதார நிபுணர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
மேலும் இந்த இறக்குமதியில் பின்னணியில் அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட செல்வாக்குமிக்க வர்த்தகர் ஒருவர் இருப்பதாக கூறப்படுகிறது.
இரும்பு மற்றும் உருக்கை இறக்குமதி செய்வதற்காக வசதிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஏற்கனவே இந்திய வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை அப்படியே வைத்திருக்கவும், நாட்டின் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியிலும் தனது வணிக நலன்களை உயிர்ப்புடன் பராமரிக்க இந்தியா இலங்கைக்கு மேலதிக கடன்களை வழங்குகிறது.