இந்திய இராணுவ வரலாற்றில் முதல் முறையாக, பீரங்கிப் படையில் 5 பெண் அதிகாரிகள் பணியில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் வெற்றிகரமாக பயிற்சிகளை நிறைவு செய்தமையை தொடா்ந்து, பீரங்கிப் படையில் இணைந்துள்ளதுடன் அவர்களிற்கு சீன, பாகிஸ்தான் எல்லையோர பிரிவுகளில் பணி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், பீரங்கிப் படையில் பெண் அதிகாரிகளை இணைத்து கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக, இராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே கடந்த ஜனவரி மாதமளவில் தெரிவித்திருந்ததுடன், இது குறித்த முன்மொழிவுக்கு மத்திய அரசும் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த 5 பெண் அதிகாரிகள் தவிர 19 ஆண் அதிகாரிகளும் இப்படையில் இணைந்துள்ளனா். ஆண் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அதே வாய்ப்புகளும் சவால்களும் பெண் அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளார்.
பீரங்கிப் படையில் பெண் அதிகாரிகள் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளதன் மூலம் இராணுவத்தில் அவா்களின் பங்களிப்பானது விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.