இராஜாங்க அமைச்சர்களுக்காக 239 வாகனங்களை அரசாங்கம் இறக்குமதி செய்துள்ளதாக, ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும் செய்திகளால் அரசியல்வாதிகள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ள நேருமென ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்து தெரிவித்த போதே,ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இதனைத் தெரிவித்தார். இங்கு பேசிய அவர்,
இராஜாங்க அமைச்சர்களுக்காக 239 சொகுசு வானங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்கள், பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த விடயத்தை மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், சமந்த வித்யாரத்ன தேர்தல் பிரசார கூட்டத்தில் சுட்டிக்காட்டி அரசியல் செய்து வருகிறார் என்றும் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில், ஜனாதிபதி,பிரதமர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளரிடமும் ஆலோசனைகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்த அவர், இராஜாங்க அமைச்சர்களுக்கு சொகுசு வாகனங்கள் அன்றி ஒரு துவிச்சக்கர வண்டியைக் கூட இறக்குமதி செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய பொய்யான செய்திகளால், அரசியல்வாதிகள் பாதிக்கப்படுவதுடன், அவர்களின் வீடுகள் மீண்டும் தீக்கிரையாக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. மருந்து கொள்வனவுக்குக் கூட தட்டுப்பாடு காணப்படுகிறது.இவ்வாறான நிலையில், இராஜாங்க அமைச்சர்களுக்கு அதி சொகுசு வாகனங்கள் என,வதந்தியைப் பரப்புகின்றனர்.இது, மக்கள் மத்தியில் தவறான கருத்தைப் பரப்பி, நாட்டில் மீண்டும் அமைதியற்ற நிலையைத் தோற்றுவிக்கும். இதற்காகவே, ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர்.
இராஜாங்க அமைச்சர்களுக்கென வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா? என்பதை துறைமுக அபிவிருத்தி விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவே, இச்சபையில் குறிப்பிட வேண்டுமென்றும் ராஜாங்க அமைச்சர் வலியுறுத்தினார்.
இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர்களுக்கு 239 வாகனங்கள் என வெளியான செய்தி தொடர்பில் துறைமுக அதிகார சபையிடம் வினவினேன், வெளியான செய்திக்கமைய எந்த வித வாகனங்களும் இறக்குமதி செய்யப்படவில்லை.
இச்செய்தி முற்றிலும் பொய்யானது. இவ்விடயம் தொடர்பில் துறைமுக அதிகார சபையின் இணை நிறுவனம் சி.ஐ.டி யில் முறைப்பாடு செய்துள்ளது,
இச்செய்தியை வெளியிட்ட ஊடகங்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இவவிடயம் தொடர்பில் பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு, உரிய தரப்பினர் அழைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.