இமாச்சலபிரதேச மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கனமழை கொட்டியது. இதனால் சிம்லாவில் உள்ள சம்மர்ஹில் மற்றும் பாக்லி ஆகிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக சம்மர்ஹில்லில் உள்ள சிவன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக திரண்டு இருந்த போது இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மட்டும் 11 பேர் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மேலும் 10 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணி நடக்கிறது. பாக்லியில் வீடுகள் சரிந்து 5 பேர் பலியானார்கள். நேற்று முன்திம் இரவும் கனமழை கொட்டியதால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டன.
நேற்று காலை தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை இணைந்து சம்மர்ஹில் சிவன் கோயிலில் மீட்பு பணிகளை தொடங்கின. நேற்று 2 சடலங்கள் மீட்கப்பட்டது. இதற்கிடையே தலைநகர் சிம்லாவின் கிருஷ்ணா நேற்று திடீரென நிலச் சரிவு ஏற்பட்டது. இதில், 8 வீடுகள் மண்ணில் புதைந்தன. அந்த வீடுகளில் இருந்தவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். நேற்று இரவு 10 மணி வரை 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் பலர் மண்ணில் புதைந்து கிடப்பதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து இமாச்சலில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பாதிப்பு, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.