உத்தரகாண்ட் மாநிலத்தின் புனித நகரங்களில் ஒன்றான ஜோஷிமத் இப்போது அழிவின் விளிம்பில் இருக்கிறது. இயற்கை பேரிடரால் ஜோஷிமத் புனித நகரம் புதையுண்டு போகிற பேரபாயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் இன்று பல்வேறு தரப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது. இமயமலையில் புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்கான மத்திய தலமாக இருப்பது ஜோஷிமத். இங்கிருந்து புகழ்பெற்ற ஆன்மீக தலமான பத்ரிநாத் 44 கி.மீ. தொலைவில் உள்ளது. பத்ரிநாத் கோவில் நிர்வாகமே, ஜோஷிமத்தில் உள்ள ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட மடத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ஜோஷிமத், புனித நகரமானது ஆதி சங்கராச்சாரியால் உருவம் பெற்றது.
ஜோஷிமத் என்ற புனிதநகரம் இனி இருக்குமா? என்ற அச்சம் உருவாகி உள்ளது. ஜோஷிமத் நகரத்தின் பல பகுதிகளில் கட்டிடங்கள் விரிசல் ஏற்பட்டு அப்படியே பூமிக்குள் புதையுண்டு போய் வருகின்றன. தற்போதைய நிலையில் சுமார் 600 கட்டிடங்கள் பூமிக்குள் புதையும் நிலையில் இருக்கின்றன.
இதனால் ஜோஷிமத் நகரைவிட்டு மக்கள் பெருமளவில் வெளியேறி வருகின்றனர். அத்துடன் எந்தநேரத்திலும் எதுவும் பேராபயம் நிகழ்ந்துவிடக் கூடுமோ என்ற அச்சத்தால், ஹெலிகாப்டர்களுடன் தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் இருக்கிறது. மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஜோஷிமத் நகரம் புதையுண்டு போவதற்கு காரணமே இமயமலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் என குற்றம்சாட்டப்படுகிறது. நீர்மின் நிலையம், நெடுஞ்சாலை விரிவாக்கம் என பல்வேறு திட்டப் பணிகளும் திட்டங்களும் இமயமலையில் இப்படி ஒரு துயரத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. இப்படியான ஒரு பேரவலம் ஏற்படும் என்பதை பல ஆண்டுகளாகவே எச்சரித்து வந்துள்ளனர். திடீரென ஏற்படும் நிலச்சரிவு, பனிச்சரிவு ஆகியவையும் பெரும் துயரம் நிகழப் போவதை சுட்டிக்காட்டி வந்தன. ஆனால் அதை அலட்சியப்படுத்தியன் விளைவாக இன்று ஜோஷிமத் நகரம் புதையுண்டு கொண்டிருக்கிறது.
இந்த பிரச்சனை தொடர்பாக இன்று பிரதமர் அலுவலகம் ஆலோசனை நடத்த உள்ளது. பிரதமர் அலுவலக செயலாளர் மிஸ்ரா தலைமையில் பல்வேறு துறைசார் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். உத்தரகாண்ட் மாநில அரசு அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்பு பணியினரும் இந்த ஆலோசனையில் பங்கேற்று அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய உள்ளனர்.