இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் வீட்டை விட்டு வெளியேறிய 2 சிறுமிகளை பெரம்பூரில் போலீசார் நள்ளிரவு ஒரு மணிக்கு பத்திரமாக மீட்டனர். சென்னை செம்பியம் அனைத்து மகளிர் காவல்நிலைய சப்இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் டிரைவர் கவிக்குமார் ஆகியோர் நேற்றுமுன்தினம் இரவுப் பணியில் இருந்தனர். அப்போது பெரம்பூர் ரயில் நிலையத்திலிருந்து மாதவரம் நெடுஞ்சாலை வழியாக இரவு 1 மணிக்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பெரம்பூர் லட்சுமி அம்மன் கோயில் அருகே 2 சிறுமிகள் நின்றுகொண்டிருந்தனர்.
அவர்களை அழைத்து விசாரணை செய்தபோது, அந்த சிறுமிகள் ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு செல்வதாக தெரிவித்தனர். அவர்களது பேச்சில் சந்தேகம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, தொடர்ந்து அவர்களிடம் பேசுகையில், அந்த சிறுமிகள் இருவரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், சிறுமிகள் இருவரும் மணலி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் அவர்கள் 10ம் வகுப்பு படித்து வருவதும் தெரிய வந்தது. இதில் ஒரு சிறுமி அடிக்கடி தனது செல்போனில் இன்ஸ்டாகிராமில் பல நண்பர்களுடன் தொடர்ந்து சாட்டிங் செய்து வந்துள்ளார். இதனை அவரது தாயார் கண்டித்துள்ளார்.
இதனால் கோபித்துக் கொண்டு நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு வெளியேறி அருகில் வசிக்கும் தனது மற்றொரு தோழியையும் அழைத்துக் கொண்டு இருவரும் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றுள்ளனர். அதன்பிறகு மீண்டும் பெரம்பூர் வந்து சுற்றிக்கொண்டு இருந்தபோது, போலீசாரிடம் சிக்கியுள்ளனர். இதனையடுத்து சிறுமியிடம் இருந்த செல்போனை வாங்கி அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்த போலீசார், 2 சிறுமிகளின் பெற்றோர்களையும் வரவழைத்து, அவர்களுக்கும் சிறுமிகளுக்கும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். நள்ளிரவு நேரத்தில் சிறுமிகளை பத்திரமாக ஒப்படைத்த போலீசாருக்கு சிறுமிகளின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து சிறுமிகளை அழைத்துச் சென்றனர்.