2022 ஜனவரி முதல் டிசம்பர் 26, 2022 வரையான காலப்பகுதியில் 701,331 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு இறுதிக்குள் சுற்றுலாப் பயணிகளின் வருகை 720,000 ஆக உயரும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
2021 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 194,495 ஆக இருந்தது.
இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பற்றிய சுருக்க அறிக்கையின்படி, டிசம்பர் 26 ஆம் தேதி வரை, இந்த மாதத்திற்குள் மொத்தம் 73,314 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
அடுத்த வருடம் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் கணிசமான எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் சில்வர் ஸ்பிரிட் சொகுசு கப்பல் நேற்று (டிச.26) தீவில் இருந்து புறப்பட்டது.
438 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 404 ஊழியர்களுடன் இந்த சொகுசு கப்பல் டிசம்பர் 23 அன்று கொழும்பு துறைமுகத்தில் வந்து சேர்ந்தது.
கப்பலில் இருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் கொழும்பு, ஹபரணை, சீகிரியா, பொலன்னறுவை ஆகிய பகுதிகளுக்குச் சென்று நேற்று காலை (டிச.26) காலை 07.30 மணியளவில் கொழும்பில் இருந்து திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தனர்.
பின்னர், திருகோணமலை பகுதிக்கு விஜயம் செய்த சுற்றுலாப் பயணிகள் குழுவினர், நான்கு நாள் பயணமாக தீவுக்குச் சென்றுவிட்டு நேற்று மாலை சிங்கப்பூர் நோக்கிச் சென்றனர்.
2022ஆம் ஆண்டு இலங்கைக்கு வரும் இறுதி பயணக் கப்பல் இதுவாகும்.